Monday 6th of May 2024 08:51:24 AM GMT

LANGUAGE - TAMIL
-
கலைப்பீட மோதல் குறித்த விசாரணை நாளை ஆரம்பம்!

கலைப்பீட மோதல் குறித்த விசாரணை நாளை ஆரம்பம்!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களிடையே கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து, விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட தனி நபர் ஆயத்தின் விசாரணைகள் நாளை 21 ஆம் திகதி, புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த 8 ஆம் திகதி கலைப்பீடத்தின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகறாறு முற்றி மோதலாகியிருந்தது. அன்று மாலை வளாகத்தினுள் இடம்பெற்ற மோதலின் போது சமரசம் செய்ய முற்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் உட்பட அதிகாரிகளுடன் முரண்பட்டுக் கொண்ட மூன்றாம் வருட மாணவர்கள், துணைவேந்தர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தம்மைத் தாக்கியதாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.

எனினும், உடனடியாகவே மாணவர்கள் மத்தியில் பேசிய துணைவேந்தர், தான் உட்பட அனைவரையும் விசாரணை செய்யும் வகையில் சம்பவம் குறித்து விசாரிப்பதற்குச் சுயாதீன விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியதை அடுத்து மாணவர்கள் அன்றிரவு கலைந்து சென்றிருந்தனர்.

மறுநாள், 9 ஆம் திகதி கூடிய பல்கலைக்கழகப் பேரவை, வணிக முகாமைத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் மா. நடராஜசுந்தரத்தை விசாரணையாளராகக் கொண்டு தனிநபர் விசாரணை ஆயம் ஒன்றினை நியமித்திருந்தது.

இதனிடையே, பல்கலைக்கழகத்துக்கும், அதன் துணைவேந்தருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட - மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்கள் அனைவரையும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்றும், அதுவரை சம்பந்தப்பட்டவர்கள் வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து கலைப்பீட விரிவுரையாளர்கள் அனைவரும் விரிவுரைகளைப் புறக்கணிக்கப் போவதாக கலைப்பீடச் சபை ஏகமனதாக முடிவு செய்து அறிவித்தது.

இதனை அடுத்து, மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்கள் என நிர்வாகத்தினால் இனங்காணப்பட்ட 21 மாணவர்கள் வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதன் பின் கடந்த 12 ஆம் திகதி, திங்கட்கிழமை முதல் கலைப்பீட விரிவுரைகள் வழமைக்குத் திரும்பின.

விசாரணைக்கென நியமிக்கப்பட்ட பேராசிரியர் மா. நடராஜசுந்தரம் சத்திர சிகிச்சை ஒன்றுக்கு உட்பட்டிருந்ததனால், விசாரணையில் தாமதம் ஏற்பட்டிருந்தது. எனினும் நாளை முதல் விசாரணைகள் முழு வீச்சில் இடம்பெறும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதற் கட்டமாக சம்பவ தினத்தன்று, தாக்குதலுக்கு உள்ளாகிய விரிவுரையாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட அதிகாரிகளும் நாளை சாட்சியமளிக்கவுள்ளனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE